விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 22ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
ஞானசார தேரர் சார்பாக தொடரப்பட்ட பிணை மனு கோரிக்கை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எவரும் சமூகமளித்திருக்காத நிலையில் அதற்கான பிணை மனு மீதான விசாரணை நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடுமையாக எச்சரித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
விசாரணையில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து 6 மாதகால சிறைத்தண்டனையை விதித்த ஹோமாகம நீதவான் நீதிமன்றம், சந்தியா எக்னலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபா நட்டஈட்டை வழங்கும்படியும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு உத்தேசித்த பொதுபல சேனா அமைப்பினர், ஞானசார தேருக்கான பிணை மனு கோரிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இருந்த போதிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த அதிகாரியும் இன்றைய வழக்கு விசாரணையில் மன்றில் பிரசன்னமாகாத படியினால் மனு மீது எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் விசாரணை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
இதேவேளை ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்த அதேவேளை, தென்னிலங்கையின் காலி ஹிக்கடுவ பகுதியிலிருந்து பாத யாத்திரை ஒன்றும் பிக்குமார்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.