ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகத் தான் நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஞானசார தேரர் காவி உடையுடன் சிறைத்தண்டனை அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கைதிகள் வழக்கமாக அணியும் அரைக்காற்சட்டையே வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏற்கனவே, 18 பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும் சிறைச்சாலை ஆணையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர்களில் 15 பேர் பௌத்த பிக்குகள். ஆறு மாதங்கள் தொடக்கம் 7 ஆண்டுகள் வரை இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரைக்காற்கட்டையுடன் கூடிய சிறைச்சாலை உடையே அணிந்திருக்கின்றனர்.
அதேவேளை, இந்து, கிறிஸ்தவ ,இஸ்லாமிய மதகுருமார் தலா ஒவ்வொருவரும் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர்.
கொலை, வல்லுறவு, கொள்ளை, வன்முறை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் இந்து மதகுரு, சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</