யாழ் செய்திகள்:யாழ். தென்மராட்சியில் தென்னம் தோட்டமொன்றில் திருட்டுத் தனமாகத் தேங்காய்கள் களவாடிய நபரொருவருக்கு தென்னந் தோட்ட உரிமையாளர் பெருமனதுடன் மன்னிப்பு வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பட்டப்பகல் வேளையில் சைக்கிளில் வந்த நபரொருவர் யாழ்.தென்மராட்சி கனகம் புளியடிச் சந்தியிலுள்ள தென்னந் தோட்டமொன்றில் தேங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்ததைத் தற்செயலாக அவ்விடத்திற்கு வருகை தந்த காணி உரிமையாளர் அவதானித்துள்ளார்
அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களின் உதவியுடன் தேங்காய் பறித்த திருடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இது தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபரின் குடும்பக் கஷ்ர நிலைமையை அறிந்த காணி உரிமையாளர் அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.