உள்ளூர் செய்தி:சாவகச்சேரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் அடித்து தண்டித்ததாக காவற்துறை அவசர பிரிவு இலக்கத்திற்கும் தென்மராட்சிக்கு பொறுப்பான உதவி காவற்துறை அத்தியட்சகர் காரியாலயத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாடசாலையில் தரம் 10 கல்வி பயிலுகின்ற மாணவி ஒருவர் நேற்று மதியம் பாடசாலை முடிந்து பெற்றோருடன் மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீதியில் விழுந்துள்ளார்.
இதனால் காயமடைந்த மாணவியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாணவி மாற்றப்பட்டுள்ளார்.
இதன் போது மாணவியை பரிசோதித்த வைத்தியர் உள்ளங்கையில் கண்டல் காயங்கள் இருப்பதை அவதானித்து மாணவியை வினவியுள்ளார். இதன்போது அதிபர் முச்சக்கர வண்டியின் ஏரியலால் அடித்துள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையில் தரம் 10, 11 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை மைதானத்தில் வைத்து பாடசாலை அதிபர் தண்டித்துள்ளார்.
இதன்போதே முச்சக்கர வண்டியின் ஏரியல் ஒன்றினால் அதிபர் அடித்துள்ளதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே மாணவியின் தந்தை இவ்விடயம் தொடர்பாக காவற்துறை அவசர இலக்கத்து முறையிட்டுள்ளார்.