உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தால் சர்வதேச அரசியல் தளத்தில் ஒருவித அதிர்வு நிலை ஏற்பட்டுள்ளதுடன், உலக நாடுகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேற்குறித்த அமெரிக்காவின் தீர்மானத்தினை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க நிரந்தர பிரதிநிதி நிக்கி ஹெலி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் விலகிக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தீர்மானித்ததாக இதற்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. உலக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததில் இருந்து அமெரிக்கா தவிர்ந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் செய்யித் அல் ராத் ஹசைன் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவினால் எடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான தீர்மானமாகும் என ‘ஹியுமன் ரைற்ஸ் வோஜ்’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த தீர்மானம் கவலைக்குரிய விடயம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றம் உள்ளிட்ட மனிதாபிமானச் சிக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டுவந்திருந்ததுடன் அவை கணிசமானளவு நாடுகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மனித உரிமைப் பேரவையில் பலம் வாய்ந்த நாடாகவும் ஏனைய நாடுகளை தான் கொண்டுவரும் தீர்மானத்தினை ஆதரிக்க வைக்கவல்ல வல்லாதிக்கமிக்க சக்தியாகவும் விளங்கிய அமெரிக்கா மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகியமை ஈழத் தமிழ் மக்களிடையே ஒருவித அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.