அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம், பிரியா ஈழத் தமிழ் தம்பதிகள் தமது நாடுகடத்தலை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் நடேசலிங்கம், பிரியா தம்பதிகளும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயிலா மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மத்திய பகுதியில்அ மைந்துள்ள சிறிய நகரமாக பிலோய்லாவில் வசித்து வந்த ஈழத் தமிழ் தம்பதிகளான நடேசலிங்கம் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரும் ஸ்ரீலங்காவிலிருந்து புலம்பெயர்ந்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்தனர்.
இதற்கமைய தற்காலிக வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இருவரும் பிலோய்லா நகரில் வேலைசெய்துகொண்டு தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்களது வீசா முடிவுற்ற நிலையில் அவர்களுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் நாடுகடத்துவதற்காக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பிலோய்லா நகரிலிருந்து பலவந்தமாக அகற்றி மெல்பேர்ன் நகரிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர்.
கடந்த 100 நாட்களுக்கு மேலாக தமது இரு பெண் குழந்தைகளுடன் மேல்பர்ன் அகதிகள் தடுப்பு முகாமிலுள்ள நடேசலிங்கம், பிரியா ஆகியோரினது வழக்கு அவுஸ்திரேலிய பெடரல் சர்கியுட் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் விசாரணை கடந்தமே மாதம் நடைபெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பை அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரியிருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடேசலிங்கத்தின் மனைவி பிரியாவும் அவரது மூத்த மகளும் தாக்கல் செய்திருந்த மனுவையே பெடரல் நீதிமன்ற நீதிபதி கெரோலின் கேர்ட்ன் இன்று (21.06.2018) நிராகரித்திருக்கின்றார்.
இதனையடுத்து இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் வானொலி நிகழ்ச்சியொன்றில் இணைந்துகொண்ட பிலோய்லா நகர மக்கள் நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது உள்ளதாகவும், இதனால் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தலையிட்டு அவர்களது நாடு கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக 21 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்வதற்கும் நடேசலிங்கம் – பிரியா தம்பதியினருக்கு அனுமதி இருக்கின்றது. எனினும் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து நடேசலிங்கம் – பிரியா ஆகியோரிடமிருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் குடிவரவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இதனால் நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் எந்நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என்றும் குயின்ஸ்லாந்து பிலோய்லா நகர மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினர் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக குயின்ஸ்லாந்து பிலோய்லா நகர மக்கள் பிலோய்லா நகரிலும் அதேபோல் மெல்பேர்ன் நகரிலும் போராட்டங்களையும் நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய தீர்ப்பு தொடர்பில், அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் பென் ஹிலியர் குறிப்பிடுகையில், புகலிடம் கோரிய நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினர் கைவிலங்கிடப்பட்டு தனித்தனி வான்களில் மெல்பர்ன் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஸ்ரீலங்கா செல்லவுள்ள ஓர் விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில், சட்ரீதியான தலையீட்டை அடுத்து அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
இன்றைய நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, “உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் பெடரல் சர்கியுட் நீதிமன்றின் தீர்ப்பினை அறிந்துள்ளததாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த குடும்பத்தினரின் வழக்கானது பல வருடங்களாக பல நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் செல்லுபடியாகாத விசா கைவசம் இல்லாத வெளிநாட்டவர்கள், தாமாக சொந்த நாடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியும் என்றும் அவ்வாறு திரும்பிச் செல்ல மறுப்பவர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்படுவர் அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.