மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை – உனுகொட்டுவ பகுதியில் உள்ள நகை கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் வெயாங்கொட பகுதியை சேர்ந்த சமீர இந்திரஜித் என்ற நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை, உனுகொட்டுவ பகுதியில் இன்று காலை கொள்ளை கும்பலொன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளடன் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரையும் மாத்தறை அரச போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உனுகொட்டுவ பகுதியிலுள்ள நகை கடையொன்றில் 6 பேருக்கு மேற்பட்ட கொள்ளை கும்பலொன்று கொள்ளையிட முற்பட்டபோது அதனை தடுத்த நிறுத்த பொலிஸ் அதிகாரி மூவரும் முற்பட்டபோது மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொள்ளை கும்பல் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டபோது இந்த ஐவரும் படுகாயமடைந்ததாகவும் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொள்ளையர்களும் படுகாயமடைந்திருப்பார்களென சந்தேகிப்பதாகவும் மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.