ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுகட்டி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த சுதந்திரமும் ஜனநாயகமும் நூற்றுக்கு இருநூறு வீதம் இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியை உயிரற்ற ஆட்சியாக அடையாளப்படுத்துவதற்குச் சிலர் முயற்சித்து வருகின்றனர். நாட்டில் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சிக்குக்கு இடமளிக்கப்போவதில்லை. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
81 ஆவது கம்உதாவ வீடமைப்புத் திட்டம் குருணாகல் நிக்கவரெட்டிய, கொட்டவெஹர, வெஹரபுர வீடமைப்புத்திட்டம் அரச தலைவரால் பொதுமக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. அதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹிட்லரைப் போன்று ஆட்சியைப் பிடியுங்கள் என்று கோத்தபாயவிடம் மகா சங்கத்தினர் கூறியுள்ள நிலையில் மைத்திரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் காணப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவே 2015 இல் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த அனுபவங்களை மறந்தவர்கள், தற்போது மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சியை வேண்டி நிற்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் வைத்த எதிர்பார்ப்பு வீண்போவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பயணம் என்பதை அவர்கள் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கிடைக்கப்பெற்றுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பிழையாக பயன்படுத்தி அரசைச் சாடுவதற்குச் சிலர் முயற்சிக்கின்றபோதும், நாட்டில் உள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் ஒன்றுசேர்த்து நாட்டுக்குத் தேவையான சரியான அரசியல் மற்றும் அபிவிருத்திப் பயணத்தை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வேன்.
மூன்றரை வருட காலமாக நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் விலகிச் சென்றிருந்த பன்னாடுகளை மீண்டும் தாய் நாட்டுடன் நெருக்கமாக்குவதற்கும் நாட்டுக்குத் தேவையான பல வெற்றிகளைக் கொண்டு வரவும் முடிந்துள்ளது. இந்தப் பயணத்தைப் பின்னோக்கித் திருப்பஎவரும் உடந்தையாக இருக்கக் கூடாது – என்றார்.
6.67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த வீடமைப்புத்திட்டம் 32 வீடுகளை கொண்டுள்ளது. இந்த வீட்டுத்திட்டம் மின்சாரம், சுத்தமான குடிதண்ணீர் மற்றும் முறையாக அமைக்கப்பட்டுள்ள வாயில் மற்றும் உள்ளக வீதி முறைமையுடன் முன்மாதிரி வீட்டுத்திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது என்று அரச தலைவர் ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.