பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை
உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்
எனக்கான இரவுகள் –
கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான்.
மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில் பார்த்து அழகுக் குறிப்புகள் வாங்கிச் செல்வார்கள்.
இவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் மட்டும். அக்கம்பக்கத்தில் இருந்து சினிமா துறை வரை இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பாராட்டாதவர் கிடையாது.
எல்லாம் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான் அவர்களின் வாழ்க்கையில் சந்தேகப் புயல் அடித்தது. கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது.
வேலை முடிந்து நடு இரவு வருபவன் குப்புறப்படுத்து உறங்கிவிடுவான்.
மனைவியை தொடுவது கூட இல்லை. கிருத்திகாவுக்கு சில நேரங்களில் விரகதாபம் வாட்டி எடுக்கும். தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்.
ஒரு நாள் சந்தேகம் வந்தவளாக அவனது கைபேசியை எடுத்து சோதனை செய்தாள். ஒரு பெண் பெயரில் உள்ள எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன.
இந்தப் பெண்ணுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா? இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ? கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள்.
ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி? திருமணம் என்கிற நீண்ட கால உறவில் செக்ஸ் மீது சலிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு ‘Sexual boredom’ என்று பெயர்.
எந்தக் காரணமும் இல்லாமல் செக்ஸ் ஆர்வம் குறையும்.
அமெரிக்காவில் ரூபன் என்னும் விஞ்ஞானி 100 நபர்களின் விறைப்புத்தன்மையை ஆராய்ச்சி செய்தார்.
அதில் முக்கால்வாசி பேர்களுக்கு மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதுதான் விறைப்புத்தன்மை கோளாறு இருந்தது.
மற்ற பெண்களிடம் செக்ஸில் ஈடுபடும் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் ஒரே மனைவியுடன் பல காலம் வாழ்ந்து வருவதால் உருவாகும் சலிப்பு என்பதை கண்டறிந்தார்.
பல வருடங்களாக ஒரே படுக்கையறை. ஒரே மாதிரியான தலையணை, போர்வைகள். அழுக்கு நைட்டி. ஒரு வாரம் துவைக்காத கைலி… இப்படி இருந்தால் எப்படி மூடு வரும்? ஆசையை தூண்டிவிடும் படி படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கலவிக்கு முன் தம்பதிகள் இருவரும் குளித்து, துவைத்த சுத்தமான உடை அணிய வேண்டும்.மனைவி மலர் சூடிக்கொள்வது அவசியம்.
மல்லிகை போன்ற மணமுள்ள மலர்கள் கலவி ஆசையை கிளப்பிவிடும். கணவன் வியர்வை வாடை தெரியாமல் நறுமண திரவியங்களை தெளித்துக் கொள்ளலாம்.
உடலுறவுக்கு முன் உள்ள ‘ஃபோர் ப்ளே’ விளையாட்டுகளை புதிதாகச் செய்ய முயல வேண்டும். வித்தியாசமான உடலுறவு நிலைகளையும் தம்பதிகள் முயன்று பார்க்க வேண்டும்.
நல்ல ஆரம்பம் இருந்தால் கிளைமேக்சும் அமோகமாக இருக்கும். மூடு வருவதற்கான நல்ல சூழ்நிலையை படுக்கையறையில் அமைக்க வேண்டும்.
சுவரில் நவீன ஓவியங்களை மாட்டலாம். குடும்பப் பெரியவர்களின், கடவுள்களின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. மிதமான ஒளியில் விளக்குகளை அமைத்துக்கொள்வதும் நல்ல மனநிலையை தரும். மனைவி படுக்கையறையில் காமத்தை தூண்டும் உள்ளாடைகளை அணியலாம்.
மனதிற்கினிய இசையை கசிய விடலாம். நல்ல மணம் கொடுக்கும் ஊதுபத்தியை படுக்கையறையில் ஏற்றி வைக்கலாம்.
எந்தப் பிரச்னை தம்பதிகளுக்குள் இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான சூழலை வீட்டிலும் படுக்கையறையிலும் பராமரித்தாலே என்றும் இளமையுடன் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
(தயக்கம் களைவோம்!)
மன்மதக்கலை !: டாக்டர் டி.நாராயண ரெட்டி