இலங்கையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியும் கடற்கரைப் பிராந்தியத்தில் நான்கில் ஒரு பகுதியும் ஒரு தசாப்தக் காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இலங்கையின் மிகச் செழிப்பான பூமியும் அவர்களது ஆள்கையின் கீழ்தான். இலங்கையின் தமிழர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்றால், அதில் 20 சதமானவர்களும் புலிகளின் ஆட்சியின் கீழ்தான் வாழ்ந்தனர்.
திறமையான ஒரு நிர்வாக இயந்திரத்தையும் புலிகள் உருவாக்கியிருந்தனர். சட்டமன்றம், சுங்கவரி, வங்கிகள், நீதிமன்றங்கள், உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை, தொலைக்காட்சி, வானொலி என ஒரு மாற்று அரசே அங்கே இயங்கிவந்தது.
தங்கள் அரசுக்கு உலகநாடுகளின் அங்கீகாரம் கோரினர். டிமோர் மற்றும் கொசொவோ விடுதலை இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி அவர்களுடைய நம்பிக்கையை வளர்த்தது.
இலங்கைத் தீவினில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், விடுதலைப்புலிகளின் ஈழத்தில் கிடைத்தது. குறிப்பாக அவர்களது தாய்மொழியான தமிழ் நிர்வாக மொழியாக இருந்தது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகமயமாதல் போக்குச் சூடுபிடிக்க, வணிகம், நிதி மற்றும் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் நாடுகளுக்கிடையேயான தடைக்கற்கள் நீங்கியதை விடுதலைப்புலிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.
குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பா மற்றும் சீன ஆயுதங்களை உலகச் சந்தையில் எளிதில் வாங்க முடிந்தது.
உலகமயமாதலின் விளைவாய் பல்வேறு துறைகளில் அவர்கள் கால் பதித்து, பல மூலைகளிலிருந்தும் ஈட்டிய பொருளைத் தங்கள் போராட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் அவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஆதரவாளர்கள் பெட்ரோல் நிலையங்கள் நடத்தினர்.
அந்நிலையங்கள் கள்ளப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற உதவின. இவ்வாறு கறுப்பை வெளுப்பாக மாற்றும் நுட்பமான பணிகளெல்லாம் கே.பியின் மேற்பார்வையில்தான் நடந்தன.
ஏறத்தாழப் பத்து லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறி இருந்தனர். அவர்கள் மத்தியில் புலிப் பிரச்சாரம் மும்முரமாக நடந்தது. இன்னொரு புறம் சிங்கள அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தன.
சில சமயம் கடுமையாகப் போராடிப் புலிகளை ஒடுக்க முயன்றன, வேறு சில நேரங்களில் அமைதிக்காக முயன்றன. எத்திசையிலும் வெற்றி கிட்டவில்லை.
அதே நேரம் உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கூடியது. தனி ஈழ அரசு ஒன்று தங்கள் மத்தியில் இயங்க, வெளிநாடு வாழ் தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட, பெரும்பான்மை பொளத்த சிங்களவர்கள் அனாதையாக விடப்பட்டுவிட்டார்களோ என்று அச்சம்கொண்டனர்.
அதுவும் குறிப்பாக ஆறுகோடித் தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழும் நிலையில். இந்தியா தங்கள் நாட்டின் வடபகுதிமீது ஒரு கண்வைத்திருக்கிறதோ என்ற ஐயம் வேறு.
ஒரு கட்டத்தில் தமிழ் இளைஞர்களுக்குக் கெரில்லாப் பாணி யுத்தப் பயிற்சி அளித்ததே இந்தியா தான் என்பதை சிங்களவர் தெரிந்து வைத்திருந்தார்கள்.
கோத்தாபயவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த இலங்கை ராணுவம் 2006இல் விடுதலைப்புலிகளிடமிருந்து நிலப்பரப்பை மீட்பதற்கான முதல் மோதலில் இறங்கியது.
அப்போது துவங்கிய அம்மோதல்தான் மூன்றாண்டுகள் கழித்து நந்திக்கடல் மணற்பரப்பில் முடிந்தது.
ஒரு புறம் புலிகள் நிபந்தனையற்ற சரணுக்குத் தயாராக இல்லை. மேலும் பொதுமக்களைப் போரில் ஈடுபடவைத்தனர். அவர்களைத் தங்கள் கேடயமாகவும் பயன்படுத்தினர் என்றால், இன்னொருபுறம் புலிகளின் தலைமையை அடியோடு அழிப்பதில் இலங்கை அரசு உறுதியாக இருந்தது.
விளைவு பல்லாயிரக் கணக்கில் அப்பாவிப் பொதுமக்கள் மடிந்தனர். பொதுமக்கள்மீது குண்டு மழை பொழிந்ததை ஐ.நா. அலுவலர்கள் நேரில் கண்டனர். நீங்கள் போர்க் குற்றங்கள் புரிகிறீர்கள் என்று ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் இலங்கை அரசை எச்சரித்தார்.
ராணுவ அணிவகுப்பு, தளபதிகளுக்குப் பதவி உயர்வு, எல்லோருக்கும் பதக்கங்கள் என்று இலங்கை அரசு வெற்றியைக் கொண்டாடியது. அதிபர் மஹிந்த ராஜபக்சயை வாழ்த்தும் சுவரொட்டிகள், பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் நாடெங்கும்.
உள்ளாட்சி நிர்வாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு அதிபரை வாழ்த்தின. அவரது செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்தது. கண்டி தலதா மாளிகையிலுள்ள புத்தரின் சிலைக்கு மாலை அணிவிக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.
200 ஆண்டுகளுக்கு முன்னிருந்த சிங்கள ராஜ்ஜியம் மறைந்தபிறகு வேறு எந்த அதிபருக்கோ மத குரு அல்லாதவருக்கோ அத்தகைய கௌரவம் அளிக்கப்பட்டதில்லை.
இனிப் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லோரும் இலங்கையரே என்றாரவர். சரணடைந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்ட முகாமின் மையப்பகுதியில் ராஜபக்ச சகோதரர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள்.
மெய்க்காவலர்கள் புடை சூழ அவரது கார் கொழும்பு நகரத் தெருக்கள் வழியாகச் செல்லும்போது, பொதுமக்கள் பூமியை முத்தமிட்டுத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
படித்து நல்ல பணிகளில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இலங்கையைக் காப்பாற்றிய மஹிந்த அரசராக முடிசூட்டப்பட வேண்டும் என்று மிக அதிகமானோர் கருத்துத் தெரிவித்தனர்.
இலங்கையில் பெரும்பாலானோருக்கு அஞ்சி அஞ்சி வாழ்ந்த அவர்களுக்கு நிம்மதிதான்.ஆனால் இனத்தின் காரணமாகவே, அவர்கள் பேசிய மொழியின் காரணமாகவே ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழர்கள் விடுதலைப்புலிகளைத் தங்கள் காவல் தெய்வமாகத்தான் பார்த்தனர்.
விடுதலைப்புலிகளின் மறைவு தமிழர்கள் பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வையும் அளிக்கவில்லை. பொதுவாக இலங்கைச் சமூகத்தில் நிலவி வந்த வன்முறைகளும் ஓயவில்லை.
தொடர்ந்து மதச்சார்பற்ற, ஜனநாயக, தாராள மன மரபுகளுக்கு முரணாகவே மஹிந்த ஆட்சி நடந்துகொண்டது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கைத் தீவில் சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து வாழ்ந்திருக்கின்றனர். சில காலகட்டங்களில் ஓர் இனமும் மற்ற கட்டங்களில் வேறோர் இனமும் ஆட்சியில் இருந்திருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் இணக்கத்துடன் பல காலம் வாழ்ந்திருக்கின்றனர். இலங்கை மக்கள்தொகையில் தமிழர்கள் 18 சதவீதம். இதில் இலங்கைத் தமிழர்கள் 12.5 சதவீதம்.
பிறர் இந்தியத் தமிழர்கள். இலங்கை அரசியலைப் பொறுத்தவரை இலங்கையிலிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இந்தியாவிலிருக்கும் தமிழர்கள், இலங்கையையே பூர்விகமாகக்கொண்ட தமிழர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கலாம். ஆனால் தமிழர்கள் அனைவரும் திராவிட இனத்தவர், இலங்கைத் தமிழருக்கும் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இனரீதியான வேறுபாடில்லை.
சிங்கள பௌத்தர்களோ தாங்கள் வட இந்தியாவிலிருந்து தீவிற்கு வந்து சேர்ந்தவர்களின் வம்சம் என்கிறார்கள். அவர்கள் மக்கள்தொகையில் 75 சதவீதம்.
ஓர் இனத்தவர் பேசும் மொழி அடுத்த இனத்தவர்க்கு விளங்காது. இரு மொழிகளின் வரிவடிவமும் வேறு வேறு. மேலே குறிப்பிட்டதைப் போலப் பண்டைக்காலங்களில் சிங்கள அரசுகளும் தமிழ் அரசுகளும் மாறி மாறித் தீவை ஆண்டிருக்கின்றன.
அவ்வரலாற்றைச் சொல்லுவதில்கூட இரு இனங்களுக்குமிடையே கடும் முரண்பாடுகள் இருக்கும்.
மற்ற நாடுகளில் நடந்ததைப் போலவே, இன்னமும் நடப்பதைப் போலவே இவ்வின மோதலை, முரண்பாடுகளைத் தங்கள் லாபத்திற்குப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், வரலாற்றையும் தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் திரித்துச் சொல்வர்.
-முற்றும்-