ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் லீக் ஆட்டத்தில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் – துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் கோல் அடித்தார். இருப்பினும் பெல்ஜியம் அணி 2-1 என முன்னிலை வகித்தது.
முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். துனிசியா வீரர்கள் முதல் பாதிநேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.
அதன்பின் துனிசியா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி கோல் அடித்தார். இது பெல்ஜியம் அணிக்கு மேலும் முன்னிலை கொடுத்தது.
இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக நடைபெறும் லீக் போட்டிகளில் கொரியா குடியரசு – மெக்சிகோ, ஜெர்மனி – ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.