உள்ளூர் செய்திகள்:மட்டக்களப்பு இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் வேண்டுதல் செய்துள்ளார்.
உண்மையை மறைக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு துணை போகும் பொலிஸ் அதிகாரிகளின் கால், கைகள், எலும்புகள் முறிந்து போக வேண்டும் எனவும் தெய்வங்கள் உண்மையாக இருக்குமானால், மக்களின் வேண்டுதல் நடக்கும் எனவும் கூறி சுமணரத்ன தேரர் சிதறு தேங்காய் உடைத்துள்ளார்.
சுமணரத்ன தேரர் இந்து ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மட்டகளப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் பிக்கு என்பதுடன் அதிகாரிகளுடன் அடவடித்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகளும் ஊடங்களில் வெளியாகி இருந்தன.
கண்டி திகன பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களின் போதும் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கலந்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.