பிரதான செய்திகள்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிராதுப் பத்திரம் (நீதி மன்றத்தில் முறையீட்டு விண்ணப்பம் கொடுத்தல் – Plaint ) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நம்பகமாக அறியவருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
கொலையை விபத்தாக மாற்ற முயற்சி
சம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
மாணவர்களின் சடலங்கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதிவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
5 பொலிஸார் கைது
அதனடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டோருக்கு அழுத்தம்
“உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைத்தனர். அதனால் மறுநாள் கஜன் எனும் மாணவனின் தாயார் பொலிஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி, இது தற்செயலாக நடந்த சம்பவம் இது தவறுதலாக நடந்து விட்டது, வேணும் என்று செய்த ஒன்றல்ல என பல விடயங்களை கஜனின் தாயாரிடம் தெரிவித்தார்” என்று பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
நீதிமன்றின் கட்டளைக்கு
சிஐடி நடவடிக்கையில்லை
பொலிஸ் அதிகாரியின் அழுத்தம் தொடர்பில் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அதுதொடர்பான விசாரணை அறிக்கையையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதுவரை நீதிமன்றில் முன்வைக்கவில்லை.
5 பொலிஸாரும் பிணையில் விடுவிப்பு
5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு நாளை 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.
3 பொலிஸார் விடுவிப்பு
வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டுள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டு
மேலும் முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர் என அறிய முடிகின்றது.
சுருக்கமுறையற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நாளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.