விமானப் பணியாளர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாய் அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. மார்பகம், கருப்பை, தைராய்டு, தோல் போன்ற புற்றுநோய்கள் அவர்களுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு கூறியது.
போஸ்டனில் (Boston) உள்ள ஹார்வர்ட் பல்கலையின் பொது சுகாதாரப் பிரிவு அதன் தொடர்பிலான ஆய்வை மேற்கொண்டது.
சுமார் 5,400 விமானப் பணியாளர்களும், அவர்களை ஒத்த சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட சுமார் 3,000 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மற்ற பெரியவர்களோடு ஒப்பிடும்போது விமானப் பணியாளர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 51 விழுக்காடு அதிகம் இருப்பது ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது. அதே நேரத்தில் அவர்களுக்கு மெலனோமா (melanoma) எனும் தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
அதிக உயரத்தில் ஏற்படும் இயற்கையான கதிர்வீச்சு, மாறி மாறி இருக்கும் வேலை நேரம், நேர மண்டல மாற்றங்களால் தூக்கமின்மை, விமான அறையிலுள்ள காற்றின் தரம் ஆகியவை விமானப் பணியாளர்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.