ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை 5 லட்சத்திற்கு விற்க முற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் குர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த பசுபல்டி மட்டிலெட்டி (38) என்பவர், கோயில குண்ட்லா என்ற பகுதியில் தனது மனைவி வெங்கடம்மா மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடி மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான மட்டிலெட்டி, பணத்தை வீணடித்ததால், கடன் சுமைக்குத் தள்ளப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடன் சுமையைச் சமாளிக்க, தனது 17 வயதான மூத்த மகளை தனது உறவினருக்கு 1.5 லட்சத்திற்கு கடந்த ஆண்டு விற்றார். அந்த பணத்தையும் குடி, சூது என வீணடித்தார்.
இப்போது மீண்டும் கடன் நெருக்கடி அதிகமானதால், தனது மனைவி தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை 5 லட்சத்திற்கு தனது சகோதரரிடம் விற்க முற்பட்டுள்ளார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படி, தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, தனது தாய் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி வெங்கடம்மா, காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் மட்டிலெட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடிக்காக மொத்த குடும்பத்தையும் ஒருவர் விற்க முற்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.