விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக இந்த விடயங்களை ஐ.பீ.சி. தமிழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது.
சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் பிரகீத் எக்னலிகொட என்கின்ற சிங்கள ஊடகவியலாளர் பல தளங்களில் செய்தி வெளியிட்டதுடன், அவ்வாறு அவர் செய்தி வெளியிட்ட காரணத்தினால் அவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும்; குறிப்பிடத்தக்கது.
தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மிகவும் கொடிய வகை ஆயுதங்களான இரசாயண ஆயுதங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியதை கண்டுபிடித்திருந்த ஒரே காரணத்திற்காகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளதார்.
சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் மேற்குலகமும் நன்கு அறிந்திருந்ததாகவும் பிரகீத் எக்னலிகொட ‘இனவாத யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும்’ என்ற தனது புலனாய்வு ஆய்வறிக்கையில் கண்டுபிடித்திருந்ததாகவும் சந்தியா எக்னெலிகொட அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவிற்கு நீதிகோரி கடந்த பத்து வருடங்களாக போராடிவரும் அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொட, தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் பொதுபல சேனா அமைப்பினர் உட்பட சிங்கள பௌத்த பிக்குகளால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் முன்னெடுத்திருந்த 30 வருடகால யுத்தத்தின் போது பல்வேறு கட்டங்களில் இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை பிரகீத் கண்டுபிடித்திருந்ததாகவும்இ அந்த உண்மைகள் வெளியில் வந்துவிடும் என்பதற்காகவே பிரகீத்தை முன்னாள் ராஜபக்ச ஆட்சியில் கடத்தி காணாமல் ஆக்கியிருப்பதாகவும் சந்தியா குற்றம்சாட்டினார்.
இது குறித்து மேலும் தெளிவுபடுத்திய சந்தியா எக்னெலிகொட…..
‘ பிரகீத் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி காணாமல்போனதை அடுத்து 2015 ஆம் ஆண்டு வரை அந்த சம்பவம் மூடிமறைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. பிரகீத்தை ஏன் காணாமல் ஆக்கினார்கள் என்பது தொடர்பில் அதுவரை எவருக்கும் தெரியாத புதிராக இருந்து வந்தது. பிரகீத் என்ன செய்தார் என்பதும் இந்த சமூகத்தில் எவரும் அறிந்தும் இருக்கவில்லை.
பிரகீத் செய்த முக்கிய பணிகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ராஜபக்சவினருக்கு எதிராக கட்டுரைகளை எழுதியமை. ராஜபக்சக்களினால் இழைக்கப்பட்ட குற்றங்களை அம்பலப்படுத்தியமை. அதேபோல் சரத் பொன்சேகாவிற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசணைக் குழுவின் ஊடாக அவரது தேர்தல் நடவடிக்கைகளில் இணைந்துகொண்டமை.
அதனைவிட பிரகீத் எழுதிய இந்த ஆவணம். இன அடிப்படையிலான யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும் என்ற இந்த ஆவணம் தொடர்பில் இலங்கையிலுள்ள மற்றும் சர்வதேச தரப்பினருக்கும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த ஆவணத்தின்படி இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது எந்தகாலப்பகுதிகள் என்பதையும் பிரகீத்தின் புலனாய்வு அறிக்கையில் கோடிகாட்டியுள்ளார்.
யாராவது ஒரு தரப்பு இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்றால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுவினரை அழிப்பதற்கு அல்ல ஒட்டுமொத்த இனத்தையும் அழித்துவிடுவதற்காகவே இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என்பதை பிரகீத் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
இந்த அரசுகள் செய்யும் இவ்வாறான கொடூரங்களை மேற்குலகம் அறிந்திருக்காதிருக்க வாய்ப்பில்லை என்றும் பிரகீத் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை போன்ற நாடுகளை பலம்வாய்ந்த நாடுகள் பரிசோதனைக் களமாக பயன்படுத்தி வருவதும் கவலைக்குறிய விடையம் என்றும் பிரகீத் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் இந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த நான் தயாராகவே இருக்கின்றேன். ஏற்கனவே இந்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்பட்டும் இருக்கின்றது’ என்றும் சந்தியா எக்னெலிகொட மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘இனவாத யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும்’ என்ற பிரகீத்தின் இந்த புலனாய்வு அறிக்கை முதன்முறையாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் ஒஸ்வின் தொழிலாளர் கல்விக்கூடம் என்ற நவ சமசமாஜ கட்சியின் கல்வி நிலையத்தினால் 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஏற்பாடுசெய்திருந்த கருத்தரங்கில் பிரகீத் எக்னலிகொட வெளியிட்டு உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்திருந்தார்கள் எப்பது தொடர்பாக ஐ.பீ.சி. தமிழில் ஜுன் 2016 இல் வெளியான ஆதாரங்கள்:
இனவாத யுத்தமும் – இரசாயண ஆயுதங்களும் என்ற பிரகீத்தின் புலனாய்வு அறிக்கை: