“அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…”
“ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான உறவு எப்போது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியவில்லை.”
மீரட் நகரத்திலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியான கபாரி பஜாரிலுள்ள பாலியல் தொழிலாளியான அனிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆண் ஒருவரிடமிருந்து புதிய வாழ்க்கை கிடைத்தது.
பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையில், அன்புக்கு இடமில்லை என்றாலும், அனிதா வாழ்க்கையில் அது படிப்படியாக உருவானது.
இருப்பினும், அனிதா பல அவமான உணர்ச்சியற்ற உறவுகளை கடந்து சென்றிருந்தார். அவரால் யாரையும் நம்ப முடியாமல் இருந்தது. ஆயினும்கூட நம்பிக்கையின் வெளிச்சம் அப்படியே இருந்தது.
அனிதாவுக்கு கிடைத்த இந்த அன்பு அவருக்குப் பாலியல் தொழிலிலிருந்து விடுதலை கொடுத்தது. சமுதாயத்தில் ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ அவருக்கு வழி ஏற்படுத்தியது.
பண நெருக்கடி ஏற்படுத்திய மற்றம்
மேற்கு வங்கத்தின் 24 பர்கானா என்ற மாவட்டத்தை சேர்ந்த அனிதா தனது வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை கடந்துள்ளார்.
“என்னுடைய குடும்பத்தில் பெற்றோரும், தங்கையும் மற்றும் சகோதரரும் இருந்தனர். எங்களது வீட்டில் பண நெருக்கடி என்பது எப்போதுமே இருந்தது. அச்சூழ்நிலையில், வருமானத்திற்கான மற்றொரு வழி தேவைப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
“எனவே, நான் சம்பாதித்தால் அது குடும்பத்திற்கு உதவும் என்று எண்ணினேன். அப்போது, நகரத்தில் வேலையொன்றை வாங்கித்தருவதாக எனது கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.
“நல்ல வருமானத்துடன் கூடிய வேலையைத் தருவதாக அவர் என் பெற்றோரிடம் கூறினார். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் அவருடன் வந்தேன்.”
“ஆனால், சில தினங்கள் சுற்றித் திரிந்த பின்பு, என்னை பாலியல் தொழில் செய்பவர்களிடம் விற்றுவிட்டார்.”
அப்போது, உலகமே மாறிவிட்டதை போன்று அனிதா உணர்ந்தார். அடுத்த சில நாட்களுக்கு தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு அனிதா தள்ளப்பட்டார்.
தன்னை வெளியே செல்ல அனுமதிக்குமாறு அனிதா கூறியதை யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை.
அனிதா ஒரு வேலையை தேடியே வந்தார், அதற்குப் பதிலாக ஒரு பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டது அவருக்கு மரணத்தை தழுவியது போல இருந்தது. ஆரம்பத்தில், அனிதா அதை மிகவும் எதிர்த்தார். அதற்காக அவர் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்.
“அங்கிருந்து வெளியேறுவதற்கு எனக்கு வழியே இல்லை. முதலில் எனக்கு அந்த இடம் புதிதாகவும், சிறைச்சாலை போலவும் இருந்தது. நான் வலுக்கட்டாயமாக….”
“….அதன் மூலம், என்னை நானே வாடிக்கையாளருக்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அப்போது எனக்கு மரணிப்பது அல்லது சரி என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அதனால், உடைந்துபோன நான் என்னை நானே இந்த தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டேன்.”
இந்த நரகத்திலிருந்து வெளியேற விரும்பினேன்
மனிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பார்த்த பிறகு அனிதா வாழ்க்கையில் ஒருவித மற்றம் ஏற்பட்டது.
தனக்கும் மனீஷுக்கும் இடையிலான உறவு எப்போது விரிவடைந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை என அனிதா கூறுகிறார்.
“மனீஷ் என்னை அடிக்கடி பார்ப்பதற்காக வரத்தொடங்கினார். அப்போது அவர் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது.”
ஒருநாள் மனீஷ் தன்னுடைய விருப்பத்தை அனிதாவிடம் வெளிப்படுத்தினார். எனவே, மனீஷின் ஆதரவின் மூலம் அனிதா பாலியல் தொழிலிலிருந்து வெளியேற விரும்பினார்.
ஆனால், அனிதாவால் மனீஷை எளிதாக நம்ப முடியவில்லை. அனிதா முந்தைய ஏமாற்றங்களின் காரணமாக மிகவும் கவனமாக இருந்தார். அதன் காரணமாக, அனிதா தான் பாலியல் தொழிலிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை மனிஷிடம் நேரடியாக தெரிவித்தார். மனீஷ் அடிக்கடி வருவதை மற்ற பாலியல் தொழிலாளர்களும் அறிந்திருந்தனர்.”
முத்திரைத் தாளில் விருப்பத்தை தெரிவித்த அனிதா
“சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பெண்களை விரும்பினர் என்பதால் இது அவர்களுக்கு அசாதரணமான ஒன்றாகத் தெரியவில்லை. எனவே, மனீஷ் அரசு சாரா அமைப்பொன்றின் உதவியை நாடினார்.
மீரட்டிலேயே செயல்படும் அந்த அமைப்பு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்கும் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணியையும் செய்து வருகிறது.
“எங்களிடம் வந்த மனிஷ், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணை தான் விரும்புவதாகவும் அவரை தன்னுடன் அழைத்துச்செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்” என்று அந்த அமைப்பை சேந்தவரான அதுல் ஷர்மா கூறுகிறார்.
“நான் பாலியல் தொழிலில் இருந்து அனிதாவை மீட்ட பிறகு என்ன நடக்கும் என்று கேட்டேன். அதற்கு தான் அனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மனீஷ் கூறினார். ”
முதல் தடவையே மனிஷை நம்புவது கடினமாக இருந்ததாக அதுல் கூறுகிறார். மனிஷ் தனது நோக்கத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை சரிபார்ப்பதற்காக அவரை சில நாட்களுக்கு பிறகு வருமாறு அவர் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த மனிஷ், அதே வார்த்தைகளை மீண்டும் கூறியதால் அவர் மீது அதுலுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட அனிதா
“அனிதாவை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வருவது என்பது கடினம் என்பதால், அவரின் விருப்பத்தை அறிந்து வருமாறு அதுல் மனிஷிடம் தெரிவித்தார்.
அந்த இடத்திலிருந்து வெளியேறுவதில் பெரும் ஆவலுடன் இருந்த அனிதா, ஒரு முத்திரைத் தாளை கொண்டுவருமாறு மனிஷிடம் கூறி அதில் கைநாட்டு இட்டார்.
“எனக்கு எழுதத் தெரியாது. நான் வெளியிலுள்ள யாரிடமும் பேசியதில்லை. நான் அங்கிருந்து செல்ல வேண்டுமென்று உரக்கமாக தெரிவிக்க விரும்பினேன்” என்று அனிதா கூறுகிறார்.
அதன் பிறகு, அதுல்பொலிசாரோடு அனிதா அடைக்கப்பட்டிருக்கும் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
தரகர் மீதான பயம்
தான் தேடிவந்த பெண்ணை காணததால், அவர் அனிதா என்று உரக்கமாக சத்தமிட்டார் அதுல். உடனடியாக பெண்ணொருவர் வெளியே வந்தார்.
“இது அந்த பெண்தான் என்று புரிந்துகொண்டேன். அவரது கையை பற்றிய நான், என்னோடு சேர்ந்து நடக்குமாறு கூறினேன். தரகரின் மீதான பயத்தின் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு சிறிது பயந்தார்.”
“அப்போது அங்கிருந்த தரகர் எங்களை தடுத்து நிறுத்தியவுடன், அனிதா இங்கிருந்து வெளியேற விரும்புவதாக நான் கூறினேன்.”
அதன்பிறகு அங்கிருந்து வேகமான வெளியேறி கார் மூலம் அவர்கள் வெளியேறினர். பின்பு இதுகுறித்து மனீஷின் பெற்றோரிடம் பேசினார் அதுல். உடனடியாக அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அனைத்து விடயங்களையும் மற்றும் அவர்களின் மகனின் பிடிவாதத்தையும் விவரித்த பிறகு ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அனிதாவின் கடந்தகால வாழ்க்கையை மறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர்.
மறுவாழ்வுக்கான பயிற்சி
“திருமணத்தின் மீதான நம்பிக்கை நான் இழந்தேன். ஆனால், மனிஷ் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகே எனக்கு அதில் நம்பிக்கை வந்தது.”
“அவருடைய பெற்றோர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும், நான் மோசமாக உணர்ந்திருக்கமாட்டேன். ஆனால், அவர்கள் என்னை படிப்படியாக முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.
“எனக்கு தற்போது மரியாதையுடன் கூடிய வாழ்க்கையை வாழும் மகள் இருக்கிறாள்.
மீரட்டிலுள்ள கபாரி பஜார் ஒரு சிவப்பு விளக்கு பகுதியாகும். இங்குள்ள பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களை விசில் அடித்து கூப்பிடுவதென்பது சாதாரணமான நிகழ்வாகும்.
இதுபோன்ற இடங்களில் சிக்கியுள்ள பெண்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வேறு வேலையும் கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட பெண்களுக்கு சாதாரண வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பயிற்சிகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதற்காக, மீட்கப்படும் பெண்கள், இந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு, அங்குள்ள பெண்களிடமிருந்து நடைமுறை வாழ்க்கையை கற்கும் வாய்ப்பை சில நாட்களுக்கு ஏற்படுத்தி தருகிறார்கள்.
பாலியல் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டதால் அந்தப் பெண்களின் அனைத்து பழக்க வழக்கங்களும் மாறிவிட்டதாக அதுல் கூறுகிறார்.
நன்றி- பிபிசி