புலிகளின் தங்கத்தைத் தேடிய படையினர் இறுதியில் ஆமை ஒன்றைக் கண்டு பிடித்தனர். அந்த ஆமை பத்திரமாக அருகில் இருந்த நீரோடையில் விடப்பட்டது. கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்துக்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தைத் தேடி கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இடத்தில் முதல் அகழ்வுகள் நடைபெற்றன.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்றப் பதிவாளர், கரைச்சிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தங்கம் எதுவும் அகப்படவில்லை.
நேற்று முன்தினமும் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் இரவு 9 மணிவரை நீடித்தது. சுமார் 5 மணி நேரம் அகழ்வு நடைபெற்றபோதும் தங்கம் சிக்கவில்லை.
அகழ்வுப் பணிகளின் போது ஆமை ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆமை அருகில் உள்ள நீரோடையில் பாதுகாப்பாக விடப்பட்டது.