மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, குறித்த பிரதேச பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த மது விற்பனை நிலையத்தினை அப்பகுதியிலேயே நிரந்தரமாக இயங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மது விற்பனை நிலையம் திறக்கப்பட்ட போது குறித்த கிராம மக்கள்,பொது அமைப்புக்கள் இணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதும், இது வரை மது விற்பனை நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்ற அதிகாரிகள் எவரும் முன் வரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த கிராமத்தில் உள்ள பெண்கள்,சிறுவர்கள், வயோதிபர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, மன ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர்.தொடர்ச்சியாக மது விற்பனை நிலையத்திற்கு முன் சண்டை இடம் பெறுவதோடு,தீய வார்த்தை பிரையோகம் தொடர்ச்சியாக இடம் பெறுவதினால் பாடசாலை மாணவர்களும்,பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த கிராமத்தில் இருந்து முழுமையாக மது விற்பனை நிலையத்தை அகற்ற மக்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் சில அரச அதிகாரிகளின் பக்க பலத்துடன் குறித்த கிராமத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிரந்தரமாக மது விற்பனை நிலையத்தை அக்கிராமத்தில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடனடியாக குறித்த மது விற்பனை நிலையத்தை இடமாற்றம் செய்ய மன்னார் பிரதேசச் செயலாளர்,மன்னார் நகர முதல்வர்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.