வேலைதேடும் முன்னாள் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகளுக்குத் தொழில் வழங்குநர்கள் பிரதேச செயலகங்களிலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையிலும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
‘‘குறைந்தபட்சம் 5 முன்னாள் போராளிகளை தொழிலுக்காக சேர்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்குத் தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் கூடியது மாதாந்தம், 10 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் 50 சதவீத சம்பளம் மானியம் பெற்றுக்கொடுக்கப்படும்’’ என்று அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழில் வழங்குநர்கள், வேலைதேடும் முன்னாள் போராளிகள் பதிவுகளை மேற்கொள்வதன் ஊடாக இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகவல்கள் திரட்டப்படவுள்ளன.