யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் கண்டி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நகரில் உள்ள குளங்களை மறுசீரமைப்பதுடன் அவற்றைச் சுற்றி மக்கள் பயன்படுத்தக்கூடிய அமைவிடங்களை உருவாக்குவதே இந்தத் திட்டம். அதன் பரீட்சார்த்த நடவடிக்கையாக இரு குளங்களை மறுசீரமைத்து சுற்றுவட்டத்தில் பொழுதுபோக்கிடங்களை அமைப்பதற்காக 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நிதியே இப்போது வேறு நகரத்திற்குத் திருப்பப்பட்டுள்ளது.
மூலோபாய நகரங்களின் அபிவிருத்தி என்கிற உலக வங்கியின் நிதி உதவியிலான திட்டம் கண்டி, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெறுகின்றன. இந்த மூன்று நகரங்களிலுமே திட்டத்தைச் செயற்படுத்தும் வேகம் திருப்திகரமாக இல்லை என்று உலக வங்கி தனது மீளாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிலும் யாழ்ப்பாணமே ஆகப் பின்தங்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 3.7 சதவீதம் மட்டுமே இதுவரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு 2016ஆம் ஆண்டு மே மாதம் உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது. அதேயாண்டு ஒக்ரோபர் மாதம் திட்டம் தொடங்கப்பட்டது. மேல்மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் கீழ் யாழ். நகரப் பகுதியிலுள்ள 48 குளங்களை தூர்வாரி, ஆழப்படுத்தி முழுமையாக மறுசீரமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. குளங்களை ஆழப்படுத்தி நீரைச் சேகரிப்பதற்காக இந்தத் திட்டம் உள்வாங்கப்பட்டிருந்தது.
48 குளங்களையும் எவ்வளவு தூரம் ஆழப்படுத்தலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆய்வுப் பணிகளும் நடத்தப்பட்டன. இதன் அடுத்த கட்டப் பணிகள் கடந்த ஆண்டு நடுப் பகுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் அசிரத்தையால் உரிய காலப் பகுதியில் அவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற, நகர அபிவிருத்தித் திட்ட மீளாய்வின்போது குளங்களை மறுசீரமைத்தலில் உரிய முன்னேற்றம் இன்மையால் யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்ட 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் தாமதத்திற்கும் நிதித் திரும்புகைக்கும் கொழும்பு அரச அதிகாரிகளின் செயற்பாடுகளே காரணம் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் எல்லாவற்றுக்கும் கொழும்பு அதிகாரிகளின் கைகளையே தாம் பார்த்திருக்க வேண்டியதாக இருக்கின்றது என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.
திட்டம் தாமதமடைவதற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என்றும் கொழும்பில் உள்ள அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமைகளை நிறைவேற்றினால் திட்டத்தை வேகமாக முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.