உணவகச் சூழலில் ஒலிக்கும் இசையின் அளவிற்கும், நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கிறதா?
உண்டு என்பதை ஆராய்ச்சிகள் புலப்படுத்தியுள்ளன. இசையின் வேகத்திற்கும் தாளத்திற்கும் ஏற்ப, நாம் உணவை மெல்லும் வேகமும் மாறும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இசையின் ஒலி அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும்போது, நாம் கலோரி, கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கிறோம்; இசையின் ஒலி குறைவாகவும் மென்மையாகவும் இருக்கும்போது, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்கிறது ஆய்வு. குறிப்பாக, இது பாரம்பரிய இசைக்குப் பொருந்தும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.
ஸௌத் புளோரிடா பல்கலைக்கழகம் இதன் தொடர்பில் ஆய்வை மேற்கொண்டது.
பேரங்காடிகளிலும், ஒலி அளவைப் பொறுத்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை வேறுபடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இசையின் ஒலி அளவு மட்டுமல்ல; உணவகத்தின் ஒளி அளவுக்கும் ஒருவர் உண்ணும் உணவின் ஆரோக்கியத்துக்கும் தொடர்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த முறை உணவகத்திற்கோ, பேரங்காடிக்கோ சென்று திரும்பும்போது, இதுபற்றி யோசித்துப் பாருங்களேன்!