காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயது பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயது பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த வியாழக்கிழமையன்று மதியம், நீர்கொழும்பு – ஏத்துக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு மாணவியின் அலைபேசியினூடாக, மாணவியின் தாயாருக்கு அழைப்பை எடுத்துள்ள காதலன், மகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் விடுவிக்க வேண்டுமாயின், 10 மில்லியன் ரூபாய் கப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர், இதுதொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில், கப்பத்தொகையை 1 மில்லியன் வரை குறைப்பதற்கு, சந்தேகநபர், அலைபேசியூடாக இணங்கியுள்ளார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவி, கட்டானை – படபத்தல பிரதேசத்தில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலொன்றை அடுத்து, கடந்த வௌ்ளிக்கிழமையன்று (29.06.2018) மாணவி மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி, மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினையும் விசாரணைக்கு இணைத்துள்ளார்.
பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார், மாணவியிடம் மீண்டும் விசாரணை செய்ததோடு, மாணவியின் அலைபேசி தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். மாணவி அதிகமாகத் தொடர்புகொண்ட நபர் தொடர்பாக வினவியபோது, அது மாணவியின் காதலரெனத் தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார், சந்தேகநபரான மாணவியின் காதலனை கைதுசெய்து விசாரணை செய்தனர். இதன்போது, மாணவியின் (காதலியின்) தந்தையிடம் ஒரு 10 மில்லியன் ரூபாயைக் கப்பமாகப் பெறுவதற்காக, இந்த கடத்தல் நாடகத்தை ஆடியதாகவும் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில், மாணவியை ஏற்றிச்சென்று, கட்டானை பிரதேசத்தில் அவரை இறக்கிவிட்டதாகவும், சந்தேகநபர் வாக்குமூலமளித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, பிரதான சந்தேகநபரை 14 தினங்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் மாணவியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.