சீன நிறுவனத்திடமிருந்து தாம் பணம் வாங்கியது உண்மையானால் கத்தியால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
குருநாகல் – மாவத்தகமை பிரதேசத்திலுள்ள சிறி விசுத்தராம விகாரரையின் நூலகம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்துத் தெரிவித்த அவர்,
“தற்போது நாட்டை ஆளுவோர் பாரிய கொள்ளைகாரர்கள். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி எனும் பாரிய நிதிக் குற்றத்துடன் தொடர்புடையவர்கள். தற்போதைய அரசாங்கத்தினருக்கு இது தொடர்பில் சிக்கல் நிலவுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவுபெற்றும் இதுவரையிலும் உண்மையான குற்றவாளி யார் ? அவர்களுக்கான தண்டனைகள் என்ன என்பதனை யாரும் கூறவில்லை.
மாகாண சபைத் தேர்தலும் நெருங்கிவருகின்ற நிலையில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றினை துணையாகக் கொண்டு எமக்கு எதிராக செயற்பட திட்டம் தீட்டியுள்ளனர். சீன நிறுவனத்தால் எனக்கு கிடைத்தாகக் கூறப்படும் பணத்தொகையினை விட பல மடங்கு அதிகமானது இந்த பிணைமுறி மோசடி மூலம் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணம்.
தற்பொழுதும் பிரச்சினை இல்லை. இவ்வாறு நான் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கியது உண்மையானது என உறுதியாகுமெனின் கத்தியொன்றினை எடுத்து நானே எனது கழுத்தை வெட்டிக்கொள்கின்றேன்.” என்றார்.
இந்த நிகழ்வின் பின்னர் ஊகடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசாங்கத்திலுள்ள 16 பேரும் தம்முடனேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
”மாகாண சபைத் தேர்தல் புதிய அல்லது பழைய என எந்த முறைப்படி நடந்தாலும் அதில் பொதுஜன முன்னணி வெற்றிபெறும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்பொழுது 16 பேர் கொண்ட குழு என ஒன்று இல்லை மாறாக 70 பேர் கொண்ட குழுவொன்றே இருக்கின்றது.” என்றார்