வவுனியா ஹொறவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று (30.06.2018) நிதி நிறுவன ஊழியரொருவர் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் நபரொருவர் வாகனத்திற்கு லீசிங் பெற்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக மாதாந்த லீசிங் பணத்தினை செலுத்தவில்லை. அதனையடுத்து வாகனத்தினை பறிமுதல் செய்வதற்கு அனுமதியினை பெற்றதாக பறிமுதல் செய்வதற்கு நான்கு நபர்கள் சென்றுள்ளனர்.
குறித்த வாகனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (30.06.2018) மாலை வவுனியா ஹொறவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே வீதியில் வாகனத்தினை தரித்து விட்டு வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்றுள்ளார். இதன் போது வாகனத்தினுள் அவரது மனைவியும் (7 மாத கர்ப்பிணி) , அவரது உறவினர்களும் (பெண்கள்) இருந்துள்ளனர்.
இதன் போது திடீரென நிதி நிறுவனத்தின் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் வாகனத்தில் சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். திடீரென நபரொருவர் வாகனத்தில் ஏறியதினால் பதட்டமடைந்த வாகனத்தின் முன்பக்கத்தில் சாரதி ஆசனத்திற்கு அருகேயிருந்த வாகன உரிமையாரின் மனைவி (7 மாத கர்ப்பிணி) இனந்தெரியாத நபர்களின் அத்துமீறலால் வாகனத்தின் திறப்பினை எடுப்பதற்கு முயன்றுள்ளார்.
இதன் போது கர்ப்பிணிப்பெண் மீது நிதி நிறுவனத்தின் ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்குள்ளாகிய கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்தவில்லுவராட்சி அவர்களின் பணிப்பின் பேரில் குறித்த நிதி நிறுவனத்தில் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக வாகனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
நான் வாகனத்தின் லீசிங்குக்குரிய பணத்தினை காசோலையாக வழங்கினேன். பின்னர் காசோலையில் காசு என கூறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் அவர்களது அலுவலகத்தின் பெயர் குறிப்பிட வேண்டுமென குறிப்பிட்டதோடு குறித்த காசோலையை ஏற்றுக்கொள்ள காலம் கடந்துவிட்டது என தெரிவித்தே எனது வாகனத்தினை பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும் காசோலை மாற்றம் செய்யப்பட்டு நிதி நிறுவனத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
காசோலை மற்றும் பணம் ஆகியவற்றை செலுத்தியதோடு வாகனத்தை நிதி நிறுவனத்தில் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை செலுத்தி விட்டு வாகனத்தை மீளப்பெறுவதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு நிதி நிறுவன முகாமையாளர் வாகனத்துக்கு எந்த சேதமும் வராது என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விடயத்தினை விட எனது மனைவி (7மாத கர்ப்பிணி) மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். எனது மனைவிக்கு ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பு கூறுவார். எனவே இவ் விடயத்தில் எனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக பொலிஸார் நீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமேன அவர் மேலும் தெரிவித்தார்.