கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு டிரம்ப் வரியை அதிகரித்ததை அடுத்து, அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு கனடா வரியை அதிகரித்துள்ளது.
கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்து இருந்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு ஏற்க முடியாத ஒன்று என்றும், தங்களது தொழிலாளர்கள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.
இதன்படி, வரி விதிக்கப்படும் பொருட்களுக்கான பட்டியலை கனடா வெளியிட்டது. இதில், சில பொருட்களுக்கான வரிப்பட்டியல் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.