நாட்டில் அதிகரித்துவரும் நுண்கடன் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு கோரளைபற்று சமுர்த்தி வங்கிக்கு முன்பாக நபர் ஒருவர் மேற்கொண்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மரணத்தின விளிம்பில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்ததை தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் நுண்கடன் திட்டத்தின் கொடுமை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 62 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து அனுமதி பெறாமலேயே ஒரு சில நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடன் பெறுவோருக்கு எந்தவித விளக்கத்தையும் அளிக்காமல் அதிக வட்டிக்கு கடனை வழங்கி வருகின்றன
அத்துடன் நுண்கடன் ஊழியர்கள் கடனை வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று 24 மணிநேரமும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்
நுண்நிதிக்கடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்ட அதேவேளை பெரிதும் அவர்களது வாழ்க்கை முறையை பாதித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் கடன் திட்டத்தை எதிர்த்து குறித்த பகுதிகளில் அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர்
நுண்நிதிக் கடனை திருப்பிச்செலுத்த முடியாததை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், கிழக்கு மாகாணத்தில் 19 பேரும், வவுனியா மன்னார் போன்ற மாவட்டங்களில் 10 பேருமாக மொத்தம் 62 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் நுண்கடன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று சமூர்த்தி வங்கி முன்பாக நேற்று காலை 7 மணிக்கு முனுதாஸ் சிறிகாந்த் என்பவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாழைச்சேனை கண்ணகி புரம் யூனியன் கொலனிப் பகுதியில் வசித்துவருகின்ற ஒரு பிள்ளையின் தந்தையான முனுதாஸ் சிறிகாந்த என்பவரே இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
நுண்கடன் மூலம் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக நுண்கடன் நிதி நிறுவனங்களை அரசு பொறுப்பேற்று மக்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் சமுர்த்தி வங்கிகளின் கடனுதவிகளை வழங்கும் திட்டங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது தாம் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டுமாயின் அரசியல் அதிகாரிகள் உடனடியாக வருகை தரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்
இதனையடுத்து உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா. ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் , மற்றும் கோறளைப்பற்று சபை உறுப்பினர்கள் என பலர் சென்றிருந்தனர்.
இதன்போது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவருடன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கலந்துரையாடினார்
மரணத்தின விளிம்பில் இருக்கின்ற மக்களின் நுண்கடன் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.