மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்காவிடமிருந்து பெற்ற 585 மில்லியன் டொலர் பணத்தை இந்த அரசாங்கம் என்ன செய்ததென்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித் போதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,”இந்த அரசாங்கம் ஜனநாயகம் தொடர்பில் அதிகமாக கதைக்கிறது. இதனைக் கூறித்தான் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியது.
ஆனால், இன்று அமெரிக்காவின் அறிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் ஆட்சி மாற்றத்துக்காக, 585 மில்லியன் டொலர்களை வழங்கியதாகக் கூறியுள்ளது.
அதாவது, ஜனநாயகம் எனும் பெயரில், இவ்வளவு பெரியத் தொகையை அமெரிக்கா – நைஜீரியா, மியன்மார், மற்றும் இலங்கைக்கு கொடுத்துள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசாங்கம் என்றால், அறிக்கை வந்தவுடனேனே, இதுதொடர்பில் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வளவு பெரிய டொலர் தொகை இலங்கைக்கு எப்படி வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது? இந்தப் பணம் எதற்காக செலவழிக்கப்பட்டது? இதனை யார் செலவழித்தார்கள் என அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால், ஜனாதிபதியும் பிரதமரும் இதனை செய்யாது. நாட்டின் கடன் சுமை அதிகரித்தமை தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், அமெரிக்காவினால் கொடுக்கப்பட்ட 585 மில்லியன் டொலர் என்பது, மத்தளை விமானநிலையத்தைப் போல இரண்டையும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற ஒன்றையும் நிர்மாணிக்கக்கூடிய தொகையாகும். அதுவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்கவே இவ்வளவு பெரியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் எல்லாம் நடவடிக்கை எடுக்காது கடன் சுமையைக் காரணம் காட்டி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில், வரிகளை மட்டும் தான் இந்த அரசாங்கம் உயர்த்திக் கொண்டு வருகிறது. இது நாடாளுமன்றை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களின் ஆணையையும் மீறும் செயற்பாடாகும்” எனத் தெரிவித்தார்.