வடக்கு மக்களுக்காக எனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ளதாவது-:
யாழ்ப்பாணத்தில் வன்முறைகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது.வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இந்த விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை அமைச்சரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை தலைமை அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால் தான் நான் உரையாற்றியதாக விளக்க மளித்தேன்.
தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று எடுத்துக் கூறினேன். அதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.
எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர்.
அவர்கள் துன்பப்படும்போது நாம் பேசாதிருக்க முடியாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்தமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன் -– என்றுள்ளது.