வட மாகாண சபையின் ஐந்து அமைச்சர்கள் யாவர் என்பதை தமக்கு அறிவிக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வட மாகாண ஆளுநரினால், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் இன்று முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலக அதிகாரி ஒருவர் சூரியனின் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.
இதற்கமைய, வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான விபரம், முதலமைச்சரினால் ஆளுநருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் மீதான ஊழல் குற்ற விசாரணை அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது வட மாகாண சபையின் அமைச்சராக பா.டெனீஸ்வரன் செயற்படுகிறார்.
இது சம்பந்தமாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்தை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு விளக்கம் கோரியபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பா.டெனீஸ்வரன் அமைச்சராக செயற்படுகின்றமை சரியானதே எனக் குறிப்பிட்டார்.
ஆனால், ஆறு அமைச்சர்கள் இருக்கின்றைமையானது குழப்பான சூழ்நிலையாகும்.
இது தொடர்பில் ஆளுநர் அலுவலகமே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாகாண அவைத் தலைவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பா டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அமைச்சராக நியமிக்கபபட்ட அனந்தி சசிதரனிடம் எமது செய்திச் சேவை இது தொடர்பில் விளக்கம் கோரியது.
முதலமைச்சர் தம்மை பதவி விலகுமாறு கோரினால், அந்தத் தருணத்திலேயே பதவி விலக தயாராக இருப்பதாகவும், அதுவே பண்பான செயல் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் தாம் மேன்முறையீடு செய்யவுள்ள நிலையில், சலனமின்றி தொடர்ந்து அமைச்சுப் பதவியை முன்னெடுக்குமாறு தங்களுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அறிவுறுத்தி இருப்பதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில், தமது அமைச்சு சார்ந்த விடயதானங்களில் அமைச்சர் என்ற போர்வையில் யாரேனும் உத்தரவு பிறப்பித்தால், அதனை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சின் திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் என்ற அடிப்படையில் தமது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு இந்த அறிவித்தலை வெளியிடுவதாக டெனீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களுக்கும், திணைக்களத்தின் நாளாந்த செயற்பாட்டிற்கும் இடையூறாகவோ அல்லது முட்டுக்கட்டையாகவோ எவரேனும் இருப்பார்களாயின், அதனை உடனடியாக தமக்கு அறியத்தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பணிப்புரைகளை மீறும் சந்தர்ப்பத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் டெனீஸ்வரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், மாவட்ட ரீதியாக உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய மீளாய்வு கூட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமையினால், அது குறித்த விசேட கலந்துரையாடலுக்கு திணைக்களத் தலைவர்களை நாளைய தினம் கூட்டத்திற்கு சமுகமளிக்கமாறும் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.