ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தில் பங்குபற்றி நாடு திரும்பும் இலங்கை தமிழ் தாய்மார் 6 பேரினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும்படி ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தூதுவர் Vojislav Šuc இடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா பிரதிநிதி சுகிந்தன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“காணாமல் போன தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத்தரக்கோரி குறித்த தாய்மார் ஐ.நாவில் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு சென்றுள்ள அவர்கள் இலங்கை இராணுவத்தின் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.பேர் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் வைத்து இலங்கைப் படையினர், புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த ஆறு தாய்மாருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் பங்குபற்றுவதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது பிள்ளைகள் மற்றும் காணாமல் போன தமிழ் மக்களுக்காக சர்வதேசத்திடம் மன்றாடி வருகின்றனர்.
குறித்த தாய்மார் கலந்துகொள்ளும் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் இதர நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இலங்கையின் இந்நாள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் , தாய்மாரின் நிகழ்வுகளைக் குழப்புவதுடன், அவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களது கடுந்தொனி மற்றும் தூஷண வார்த்தைகளால் குறித்த தாய்மார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், தமது பாதுகாப்பு தொடர்பில் பயத்தில் உள்ளனர்.
மேலும் ஒரு தாய் மயக்கமடைந்த நிலையில் ஜெனீவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இராணுவத்தினர் அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாய்மார் நாடு திரும்பும்போது அவர்கள் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும்” நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமானது இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.