இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் விஜயகலா அண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக் குறித்தே இன்று நாடாளுமன்றில் இது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தாலும் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா? இது தொடர்பில் சபாநாயகர் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதனை எமக்குத் தெளிவு படுத்தவேண்டும்.
அரசியலமைப்பினை மீறும் விதமாக உணர்ச்சிவசப்பட்டு விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் புலிகள் தேவை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள அதேவேளை வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள், சாதாரண மக்கள் படும் துன்பங்கள் தொடர்பில் பேசினால் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் குறித்து பேசியுள்ளமை பாரதூரமானதொரு விடயமாகும்.
எனவே இந்நிலையில் தொடர்ந்தும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க முடியுமா என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.