பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை அழைத்து வரும் தரகு பணியை, மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான மருத்துவர் லலித் சந்தரதாச மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரியான பிரீதி ராஜபக்சவின் கணவரே மருத்துவர் லலித் சந்தரதாச.அவர், நுகேகொடையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார்.
அங்கு பசில் ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இருந்து வரும் அரசியல் மோதல்கள் குறித்து பகிரங்கமாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த விருந்தில் மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மருத்துவர் சந்திரதாச, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திற்கு எவராலும் சவாலை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என ராஜபக்சவினரிடம் கேட்டுள்ளார்
வியத் மக அமைப்பை நடத்தி வரும் அதேவேளையில் பசில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர், தனிப்பட்ட ரீதியில் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வலுவான அரசியல் கட்டமைப்பும் அதற்கான அரசியல் போராளிகளும் பசில் ராஜபக்சவிடம் இருப்பதாகவும் இது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறியுள்ள மருத்துவர், அனைவரும் பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவரான தமது மைத்துனரின் ஆலோசனையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் கோத்தாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு அழைத்து வர தீர்மானித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே கோத்தாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது