ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 152 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய சூழலைக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த ஜுன் மாதம் முடிவு வரைக்கும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள குடியிருப்பாளர்கள் டெங்கு உருவாகக் கூடிய சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், சுமார் 152 வழக்குகள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுத்து எவ்வளவுதான் வழக்குத் தாக்கல் செய்தாலும் பொதுமக்கள் விழிப்படையாதவரை டெங்கு நோயின் தாக்கத்தை இந்தப் பிராந்தியத்திலிருந்தே ஒழிப்பதென்பது சிரமமான விடயமாகும்.
மக்களிடத்தில் இக்கொடிய நோய் குறித்த விழிப்புணர்வு இன்மையால் குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் எமது சுகாதாரப் பிரிவினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.