இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்பயா என்ற மருத்துவக் கல்வி மாணவி மீதான கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளின் மரணதண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (09.07.2018) உறுதி செய்தது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பேருந்து ஒன்றில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீதியில் தூக்கிவீசிவீசப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சில நாட்களில் அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரமான படுகொலை தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், ஒரு சிறுவன், உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடக்கும் போதே, பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் அந்த வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் முகேஷ், பவன்குமார் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி, குற்றவாளிகள் தமது தரப்பில் சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யதனர். ஆயினும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த, இந்திய உச்ச நீதிமன்றம் நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.