ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்க்க சென்ற இளைஞனை பிரதேச மக்கள் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் நபர் ஒருவர், இரண்டு வாரங்களின் பின்னர் தனது ஊரான கட்டுகஸ்தொட்ட சென்றுள்ளார். அவ்வாறு சென்றவரிடம் வீட்டிற்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்யுமாறு மனைவி கூறியுள்ளார்.
மனைவி கூறியதற்கமைய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக தனது 3 பிள்ளைகளையும் முச்சக்கர வண்டியில் அவர் அழைத்து சென்றுள்ளார்.
மனைவி கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொள்வனவு செய்ய முடியாதென்பதனால், முச்சக்கர வண்டியை ஒவ்வொரு கடை அருகிலும் நிறுத்திவிட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
அவ்வாறு நிறுத்தப்பட்ட ஒரு இடத்தில் முச்சக்கர வண்டி பின் பக்கம் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. முச்சக்கர வண்டிக்குள் இருந்த 3 பிள்ளைகளும் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்
இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தடுப்பதற்கு முயற்சித்த இளைஞன் ஒருவர் குறித்த முச்சக்கர வண்டியில் ஏறி அதனை சற்று தூரம் ஓட்டி சென்று நிறுத்த முயற்சித்துள்ளார்.
தனது பிள்ளைகளின் கூச்சல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த தந்தை முச்சக்கவண்டியுடன் தனது பிள்ளைகளை கடத்த முயற்சிப்பதாக நினைத்து அந்த பகுதி மக்களுடன் இணைந்து இளைஞனை தாக்கியுள்ளார்.
எனினும் சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த சிலர் உடனடியாக செயற்பட்டு, இளைஞனை காப்பாற்றியதுடன் சம்பவத்தை விபரித்துள்ளனர். பின்னர் தவறை உணர்ந்த தந்தை மன்னிப்பு கோரியுள்ளார்