குருநாகல் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெல்சிரிபுர கொக்கரெல்ல பகுதியில் இரண்டு தனியார் பேரூந்துகள் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கிப் பயணித்த பேரூந்தும், எம்பிலிப்பிடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கலேவெல, குருநாகல், கொக்கரெல்ல, மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பேரூந்துகளினதும் சாரதிகள் உட்பட சுமார் 20 பேர் வரை இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் தம்புள்ளை வைத்தியசாலைக்கும், கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் குருணாகல் வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டு பேரூந்துகளும் அதி வேகத்துடன் செலுத்தப்பட்டதாகவும் இரண்டு சாரதிகளும் நன்கறிந்தவர்கள் என்பதால் விளையாட்டாக பேரூந்துகளை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரூந்துகள் ஒரே உரிமையாளருடடையது என தெரியவந்துள்ளதுடன், அடிக்கடி இவ்வாறு விளையாட்டு தனமாக இருவரும் பேரூந்தை செலுத்துபவர்கள் எனவும் பயணிகள் சிலர் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தினால் குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி 45 நிமிடங்கள் தடைப்பட்டிருந்ததாவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் கொக்கரெல்ல மற்றும் கலேவெல பொலிஸார் ஈடுபட்டனர்.
வாகன சாரதிகளின் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த விதமும் அவர்களின் விளையாட்டுத்தனமுமே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு பேருந்துகளினதும் ஆசனங்கள் உடைந்ததில் பலருடைய கை, கால்கள் முறிவடைந்துடன் முகங்களிலும் பாரிய பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.