உலகிலேயே குழந்தைப் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள தென்கொரியவின் அதிபர் மேன் ஜெ தனது நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். அது என்னவெனில், வேலை செய்வதை குறைத்து குழந்தை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்.
உலகிலேயே குழந்தைப் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள மனிதவளம் தொடர்பான இந்தப் பிரச்சினை, நாட்டின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தென் கொரியா உணர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் புதிய பிரச்சினையை எதிர்கொள்வதில் தென் கொரிய அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது.
அத்தகைய முயற்சிகளுள் ஒன்றே, ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைத்து, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கிட வாய்ப்பினை வழங்குவது. அதே சமயம், இதெல்லாம் பெயரளவில்தான் சாத்தியமாகும் என்றே அரசு, தனியார் ஊழியர்கள் பலரும் கருதுகிறார்கள்.
கருவுறுதலுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் தம்பதியினருக்கு நிதியுதவி வழங்குவது, அவர்களுக்கு வாரம் மூன்று நாட்கள் விடுப்பு வழங்குவது, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பத்துக்கு அதிக சலுகைகள் வழங்குவது என்று அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் முக்கியமானவை.
எனினும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு முடிவுசெய்வதை கொரியப் பெண்கள் விரும்பவில்லை; மாறாக, வாழ்க்கைச் சூழலை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுவே அவர்களின் விருப்பமாக உள்ளதாக தெரிகிறது.