சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அவரது மரண தணடனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார்
இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை பொலிசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த நிலையில் விடுதலையான தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.
பின்னர், அவர் மும்பையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து தஷ்வந்த் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அவரது மரண தண்டனை உறுதி செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.