தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு உண்டு. ஜனாதிபதியின் அறிவுறுத்தலைப் பெற்று ஆளுநர் அதைச் செய்ய முடியும்.”
இவ்வாறு சட்டத்துறை வல்லுநர் பிரதீபா மஹநாம ஹேவா தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையிலேயே வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் பதவியை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ பறித்தெடுத்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமான மவ்பிம வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் சட்டரீதியாக சவால்களை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாக மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அவர்களின் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் காணொலிப் பதிவுகளைத் திரட்டி சட்டரீதியாக ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூர்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
“பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதாரவாகப் பேசுவதும் நாட்டின் ஒற்றுமைக்கு சவால்விடுவதும் அரசியலமைப்பை கடுமையாக மீறும் செயலாகும். விஜயகலா விவகாரத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
அவரை நீக்க முடியுமாயின் அதே குற்றத்தைச் செய்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவியிலிருந்து நீக்க முடியும். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.அமிர்தலிங்கம், வி.தர்மலிங்கம். வி.என். நவரட்ணம் மற்றும் எஸ்.சிவசிதம்பரம் ஆகியோர் 1987ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் திகதி தமது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டனர்” என்று சட்டத்துறை வல்லுநர் பிரதீபா மஹநாம ஹேவா தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.