சென்னை: பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரம் வேதா திரைப்படத்தில் வேதாவைத் தேடும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவன் கலக்க, அதே வேதாவை ஜாமினில் எடுத்து வக்கீலாக சவால் விட்டிருப்பார் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்.
ஒல்லியான அழகு, லாவகமாக விஸ்கியை சுவைப்பது, முரட்டுத்தனமாக முரண்டுபிடிப்பது அதே நேரத்தில் காதலோடு மாதவனுடன் ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருப்பார் காந்தக் கண்ணழகி ஷ்ரதா ஸ்ரீநாத்.
இப்படி விக்ரம் வேதாவில் மனம் கவர்ந்த ஷ்ரதா, அதன்பிறகு நிவின் பாலியுடன், ரிச்சியில் தலையை காட்டினார். பிறகு கன்னட சினிமாவிற்கு தடம் பெயர்ந்த இந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ், இப்போது மீண்டும் மாதவனுடன் மாராவில் நடித்து வருகிறது.
மாதவனுடன் கைகோர்க்கும் அதே வேளை, அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.பி.சினிமாஸ் இதை உறுதிபடுத்தியுள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் வெற்றியைத் தொடர்ந்து பரத் நீலகண்டன் திரைப்படத்திலும், புகழேந்தி எனும் நான் எனும் படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார்.