முதலமைச்சரிற்கு நெருக்கடி கொடுத்து, மாகாணசபைக்குள் மீண்டுமொரு குழப்பநிலையை உண்டாக்க தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ள வடமாகாணசபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார். நம்பகரமாக மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் இந்த தகவலை திரட்டியுள்ளது.
தான் ஏன் கலந்துகொள்ளாமல் இருக்கப் போகிறேன் என்பதை விளக்கி, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு முதலமைச்சர் நேற்றிரவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
டெனீஸ்வரன் விவகாரத்தை பாவித்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வடமாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிறப்பு அமர்வு ஒன்றை கோரியிருந்தனர். மாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், அயூப் அஸ்மின் ஆகியோர் உறுப்பினர்களின் கையொப்பத்தை திரட்டி, இந்த திட்டத்தின் மூளையாக செயற்பட்டனர்.
அதேசமயத்தில் கே.சயந்தன் கடந்த சில தினங்களின் முன்னர் வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் கூரே, ஆளுனரின் செயலாளர் இளங்கோ ஆகியோரை சந்தித்து, முதலமைச்சருக்கு ஆளுனர் அனுப்பிய கடிதம் மற்றும் அதற்கு முதலமைச்சர் அனுப்பி பதில் கடிதம் என்பன பற்றிய விபரங்களை திரட்டியுள்ளனர். ஆளுனரும் தாராளமாக அவர்களிற்கு தேவையான விபரங்களை வழங்கி, குழப்பத்திற்கு கூர் தீட்டி விட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சி குழப்ப அணியுடன், வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் இன்று நெருக்கடி நிலைமையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருந்து அவைத்தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. “டெனீஸ்வரன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால்- அது தொடர்பில் நானும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால்- இப்பொழுது விரிவாக பேசுவது உசிதமல்ல என நினைக்கிறேன். அதுதவிர, ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், இன்றைய அமர்வில் நான் கலந்துகொள்ள மாட்டேன்“ என குறிப்பிட்டுள்ளார். இந்த மின்னஞ்சலின் பிரதிகள் நான்கு அமைச்சர்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் முடிவை பின்பற்றி நான்கு அமைச்சர்களும் இன்றைய அமர்வை தவிர்க்கலாமென தெரிகிறது. தமிழரசுக்கட்சியின் குழப்ப அணியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சில தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் இன்றைய அமர்வை தவிர்க்க உத்தேசித்துள்ளதாக தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
அதேவேளை, மாகாணசபையிலுள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் இன்றைய அமர்வை புறக்கணிக்கலாமென தெரிகிறது. ரெலோ இன்றைய அமர்வை புறக்கணிப்பதாக நேற்று முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.