காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது.
மாவட்ட ரீதியாக அமர்வுகளை நடத்தி வரும் காணாமல் போனோருக்கான பணியகம், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில், அமர்வை நடத்தியிருந்த்து.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இந்த அமர்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்ட போதும், பெருமளவிலான உறவினர்கள் அந்த அமர்வில் பங்கேற்று தமது பிரச்னைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை 9 மணியளவில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பணியகத்தின் அமர்வு ஆரம்பமாக இருந்தது.
எனினும், அதற்கு முன்னதாகவே, அங்கு கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டபத்துக்கு வெளியே- காணாமல் போனோர் பணியகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சென்ற காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், தமது பணியகத்தின், அமர்வில் பங்கேற்று பிரச்சினைகளை கூறுமாறு தெளிவுபடுத்தினார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மறுத்தனர்.
இதனை அடுத்து சுமார் 10 மணியளவில், அமர்வு, மண்டபத்துக்குள் ஆரம்பமானது.
எனினும், அந்த அமர்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 12 பேர் மாத்திரம் பங்கேற்றனர். அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெரும்பாலான உறவுகள், இந்த அமர்வையும், பணியகத்தையும் புறக்கணித்த்தால், நேற்றைய கிளிநொச்சி அமர்வு தோல்வியில் முடிந்துள்ளது.<