வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின் பொருட்கள் களஞ்சியசாலையிலிருந்து திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபாதை வியாபாரி ஒருவர் இலுப்பையடிப்பகுதியிலுள்ள வை. எம். ஏ கட்டடப்பகுதியில் நீண்டகாலமாக பொருட்களை இரவு வேளையின்போது களஞ்சியப்படுத்தி வருவது வழமை, சம்பவ தினத்தன்று மாலை வேளையில் தனது வியாபார நடவடிக்கையினை முடித்துக்கொண்டு மூன்று உரைப்பைகளில் வியாபாரப் பொருட்களாக உடுபுடைவைகளையும் துணிவகைகளையும் களஞ்சியபடுத்திவிட்டு சென்றுள்ளார்.
மறுதினம் காலை குறித்த களஞ்சிய சாலையினை திறப்பதற்கு சென்றபோது நடைபாதை வியாபாரி களஞ்சியப்படுத்தி வைத்த மூன்று பொதிகளும் திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டட நிலையத்தினருக்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் தனது வியாபாரப் பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நடைபாதையில் காலை முதல் மாலை வரை சிறிய முதலீடுகளில் வியாபாரம் மேற்கொண்டு வரும் குறித்த வியாபாரியின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.