ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலை புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
உள்விவகார அமைச்சர் வஜிர அபேவரத்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
விஜயகலா இந்த கருத்தை வெளியிடும் போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருந்தனர்.விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்து தென்னிலங்கையிலுள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருந்தது.
அத்துடன் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டதுடன், அவரின் அமைச்சுப் பதவியும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
இதனடிப்படையில் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து தாமாக விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்ய வேண்டும் என கடும்போக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.