டொனால்ட் ரம்ப் எந்தநாட்டுக்கு தலைவர்? இதென்ன வினா என யோசிக்கக்கூடும். ஆனால் ரஷ்ய அரசதலைவர் விளாடிமிர் புட்டினுடன் ரம்ப் நேற்று நடத்திய சந்திப்பின் பின்னர் கணிசமான அமெரிக்கர்களுக்கு இந்த ஐயம் வந்து விட்டது
பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ட்ரம்பும் புட்டினும் கூட்டாக ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினர்.
இதில் பங்கெடுத்த ஒரு ஊடகர், அமெரிக்கத்தேர்தலில் ரஷ்யத் தலையீடு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நீங்கள் உங்களது புலனாய்வு அமைப்புக்களை நம்புகிறீர்களா? அல்லது ரஷ்ய அதிபரை நம்புகின்றீர்களா என்ற ஒரு வினாவை நேரடியாகவே ரம்பிடம் தொடுத்துவிட்டார்.
இந்தவினாவுக்கு பதிலளித்த ரம்ப் அமெரிக்கத்தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றார்.
ரம்பே இவ்வாறு கூறிவிட்டதால் புட்டினும் தனது பங்குக்கு அமெரிக்க தேர்தலில் ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபடக்கூறுவதாக குறிப்பிட்டதுடன்; ரம்ப் தன்னை நம்புவதாகவும் அவரை தான் நம்புவதாகவும் சொன்னார்.
அமெரிக்கத்தேர்தலில் தலையிடும் வகையில் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களின் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுப் பிரிவைசேர்ந்த 12 பேர் உடறுத்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் கடந்தவாரம் குற்றம்சாட்டிய நிலையில் ரம்ப் இதனை தெரிவித்தார்.
இதனால் ரம்ப் மீது இப்போது விமர்சனக் கச்சேரிஆரம்பமாகிவிட்டது.அமெரிக்கத்தலைவர் ஒருவரின் வெட்கக்கேடான செயல்பாடு இது என ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கண்டனம் செய்கின்றனர்.
அதேபோல ரஷ்யா அமெரிக்காவின் கூட்டாளி நாடல்ல என்பதை ரம்ப் உணரவேண்டுமென அமெரிக்க கொங்கிரஸின் அவைத்தலைவர் போல் ரயான் கண்டனம் வெளியிட்டார்.