அம்பாறை தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள 10 வயதுடைய சிறுமி ஒருவர் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 6 வருடங்களாக மாட்டு இறைச்சியை மாத்திரம் உணவாக உட்கொண்டு வருகின்றார்.
மிகவும் வறுமை குடும்பத்தை சேர்ந்த குறித்த சிறுமிக்கு தினமும் ஒரு கிலோவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு கொடுக்காமல் விட்டால் சிறுமி சுகயீனமடைவதாகவும் தாய் விஜயலதா தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மாட்டிறைச்சி கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவுக்கு அதிகமாக இருப்பதால் தன்னால் மகளுக்கு தினமும் இறைச்சி வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாய் கதறி அழுகின்றார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த 2008ஆம் ஆண்டு சிதும்; அரலியா என்ற சிறுமி பிறந்துள்ளார்.
பிறக்கும் போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட சிறுமியிடம் சில நாட்களின் பின்னர் அவரது தாய் மாற்றத்தை அவதானித்துள்ளார்.
தாய்ப் பால் அருந்திய பின்னர் வயிறு வீக்கமடையும் அதேவேளை மலத்தில் இரத்தம் வெளியேறுவதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பச்சை ஆப்பிள் மற்றும் பச்சை நாடன் வாழைப்பழங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
பின்னர் , நான்கு வயதிற்கு பின்னர் சிறுமிக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டிறைச்சியின் விலை அதிகமாக காணப்படுவதால் அதனை தொடர்ந்தும் வாங்கும் வசதி தம்மிடம் இல்லை என குறித்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே யாராவது தனக்கு உதவி செய்யுமாறு குறித்த தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.