முதலை பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட 300 முதலைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தோனேசியாவில் பப்புவா மாநிலத்தில், சோராங் நகரில் உள்ள முதலை பண்ணையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பழி வாங்கும் நோக்கத்தோடு அப்பகுதி மக்கள் இந்த முதலைகளை வெட்டிகொன்றுள்ளனர். இந்த சம்பவம் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இந்த பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த நபரை முதலைகள் கொன்றுள்ளது.
45 வயது நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாட்டுக்கு புல் அறுக்க முதலைப்பண்ணை அருகே சென்று, புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது உடைந்த வேலி வழியாக வெளியே வந்த முதலை ஒன்று அந்த நபரை கொன்றுள்ளது.
பண்ணை உரிமையாளர் உரிய இழப்பீடு தர வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அரசிடம் குறிப்பிட்டுள்ளனர். எனினும் உரிய பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அந்த நபரின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தவுடன் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த பகுதி மக்கள் ஆயுதங்கள், கத்தி, சுத்தியல் போன்றவைகளை எடுத்து கொண்டு புறப்பட்டுள்ளனர். அதே ஆத்திரத்துடன் இந்த மக்கள் முதலைப் பண்ணைக்குள் புகுந்துள்ளனர்.
புகுந்தவர்கள் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட முதலைகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இது குறித்து பண்ணை நிர்வாகத்தினர் சார்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.