கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
-இந்த நிலையில் முள்ளிக்குளம் மக்கள் பல வருடங்களாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்ததோடு,மாவட்டத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் குறித்த மக்களின் காணிகளைக் கடற்படையினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்த போதும், கடற்படையினர் குறித்த மக்களின் கணிகளை விடுவிக்கவில்லை.
-இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராமத்திற்கான நுழை வாயிலில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 38 நாள்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் மக்களின் காணிகள் உரிய காலத்தில் விடுவிக்கப்படும் என்று கடற்படை அதிகாரிகளினால் உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 3 ஆம் திகதி முள்ளிக்குளம் மக்களின் நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதாகக் கடற்கடையினர் அறிவித்திருந்தனர்.
-இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதியின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் மட்டுமே மக்களை நடமாட கடற்படை அனுமதித்திருந்தனர். ஏனைய காணிகள் காணி அளவீடு செய்யப்பட்டு பின் மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
-தொடர்ந்தும் முள்ளிக்குளம் கிராம மக்கள் மலங்காடு, காயாக்குளி, மற்றும் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களிலும் வசித்து வந்தனர்.
முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்த நிலையிலும்,அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும் தமது காணிகளில் குடியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், முள்ளிக்குளம் மக்கள் ஒன்றிணைந்து இன்று கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்றனர்.
பின்னர் தற்காலிக கூடாரங்களை அமைத்த நிலையில் குறித்த காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர். முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரன்ஸ் லியோ தலைமையின் அருட்தந்தையர்களும் மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்றனர்.
தற்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் சென்று சிரமதானப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு,பாரிய மரங்கள் வெட்டப்பட்டு தமது இடங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
எனினும் அங்குள்ள கடற்படையினர் மக்களுக்கு எவ்வித இடையூரையும் ஏற்படுத்தாத நிலை தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது