இத்தாலியின் வெரோனா நகருக்கு மத்தியில் ஓடும் அடிஜோ என்ற ஆற்றில் மூழ்கி காணாமல் போன இலங்கையர் ஒருவரின் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. ஜா-எல கலஎலிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான தெஹிவலகே நெல்சன் கொஸ்தா என்ற இலங்கையரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அடிஜோ ஆறு பாய்ந்தோடும் கெரிபால் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்திற்கு அருகில் இந்த இலங்கையர் ஆற்றில் இறங்கி இருக்கலாம் அல்லது தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கிடந்த காலணியை காணாமல் போனவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளதாக வெரோனா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கடந்த சில வருடங்களாக வெரோனா நகரில் தொழில் புரிந்து வந்துள்ளார். உயிரிழந்தவரின் சகோதரரின் முறைப்பாட்டுக்கு அமைய வெரோனா பொலிஸ் நிலையத்தின் சுழியோடிகள் மற்றும் உயிர்காப்பு அணியினர் கடந்த நான்கு நாட்களாக ஆற்றில் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஐந்தாவது நாள் காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் வெரோனா போர்கோ ரோமா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.